புதுடெல்லி:

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து விமர்சனம் செய்த பிரதமர் மோடிக்கு, டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 200 பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, உங்கள் தந்தை ராஜீவ் காந்தி ஆரம்பத்தில் மிஸ்டர் க்ளீனாகத்தான் இருந்தார். ஆனால் இறக்கும் போது நம்பர் 1 ஊழல்வாதியாக இருந்தார் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், போபர்ஸ் வழக்கில் ராஜீவ்காந்தி மீதான குற்றச்சாட்டை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டதை சுட்டிக் காட்டினார்.

அப்படியிருக்கும் போது மறைந்த தலைவரை நாகரிகமற்ற வகையில் விமர்சிக்கலாமா என கேள்வி எழுப்பியிருந்தார். பல தரப்பிலும் மோடியின் பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் 200 பேராசிரியர்கள் கையெழுத்திட்ட அறிக்கையை வெளியிட்டனர்.

அதில், ராஜீவ் காந்தி மீது தரக்குறைவான மற்றும் பொய்யான விமர்சனத்தை பிரதமர் மோடி வைத்துள்ளார். இதன்மூலம் பிரதமர் அலுவலகத்தின் கவுரவத்தை சீர்குலைத்துள்ளார். இந்த நாட்டுக்காக தன்னுயிரைக் கொடுத்து பெரும் தியாகம் செய்தவர் ராஜீவ் காந்தி.

எந்த பிரதமரும் இந்த அளவுக்கு கீழே இறங்கிவந்து மோசமாக விமர்சனம் செய்தது கிடையாது.
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் சாதனைகளை நாடறியும். வரலாறு அவரை நல்லவர் என்றும நேர்மையானவர் என்றும்தான் பதிவு செய்துள்ளது.

கார்கில் போரில் நாம் வெற்றி பெற போபர்ஸ் பீரங்கிதான் பேருதவியாக இருந்தது. ராஜீவ்காந்தி இருந்து பல ஆண்டுகள் ஆனாலும், வெற்றி அடைந்தபின் ராஜீவ் காந்தியை பெருமைபடுத்தி வீரர்கள் கோஷம் எழுப்பியதை மறக்க முடியுமா?

இந்தியாவில் ஐடி கம்பெனிகள் இன்று பல கோடிகளை சம்பாதிக்கிறார்கள். இதற்கு ராஜீவ்காந்திதான் காரணம்.

ரயில் முன் பதிவு கம்ப்யூட்டர் மயமான பிறகு தற்போது மக்களுக்கு எவ்வளவு பயன்படுகிறது. இதை செய்தது ராஜீவ்காந்தி தான் என்று குறிப்பிட்டுள்ளனர்.