புதுடெல்லி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட, மொத்தம் 20 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள், ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாட்டில் மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிகளின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு உதவுவதற்கு பல நாடுகள் முன்வந்துள்ளன. வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியை, தொலைபேசியில் அழைத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கேட்டறிந்தார்.

இந்நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள் உள்ளிட்ட 20 டன் மருத்துவப் பொருட்கள், ரஷ்யாவிலிருந்து, இரண்டு விமானங்களில், டெல்லிக்கு வந்து சேர்ந்தன.

“‘ஸ்புட்னிக் V’ தடுப்பூசி மருந்துகள், மே முதல் வாரத்தில் இருந்து வரத் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் அதை தயாரிப்பது குறித்தும் ஆராயப்படுகிறது” என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குதஷேவ் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஐரோப்பிய நாடான பிரிட்டனிலிருந்து, 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் டெல்லி வந்து சேர்ந்தன. ஆக்சிஜன் வினியோகத்துக்கு தேவையான காலி கன்டெய்னர்களை, சிங்கப்பூர், துபாயிலிருந்து, இந்திய விமானப் படை விமானங்கள் எடுத்து வந்துள்ளன. நேற்று மட்டும் 12 கன்டெய்னர்கள் வந்து சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.