டில்லி,
பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு 20 லட்சம் பேருக்கு வேலை போச்சு என்று பாரதியஜனதா ஆதரவு அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.
மோடி ஆட்சி மீது காங்கிரஸ், கம்னியூஸ்ட் போன்ற எதிர்க்கட்சிகள் கட்சிகள் குற்றம்சாட்டினால், அது அரசியல் காழ்ப்புணர்ச்சி என பாஜ மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
ஆனால் பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங்கம் (பிஎம்எஸ்) ஒரு பகீர் குற்றச்சாட்டை மத்திய அரசு மீது சுமத்தியுள்ளது.
இந்த அமைப்பை சேர்ந்த பஜ்நாத் என்பவர் கூறியிருப்பதாவது:-
மத்தியில் மோடி ஆட்சி அமைந்தது முதல் 1 லட்சத்து 35 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று அதிரடியாக குற்றம் சாட்டினார்.
அதேபோல் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு அமைப்பு சாரா தொழில்களில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இந்த அறிவிப்பால் நாட்டின் மொத்த உற்பத்தி பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றார்.
மேலும், ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பதற்கு முன் அதிக வங்கி கிளைகளும், வங்கி கணக்குகளும் புதிதாக தொடங்கி இருக்க வேண்டும். அதேபோல் அதிகளவில் புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்திருக்க வேண்டும். பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகர வேண்டும் என்பது எளிதான சாதனையாக இருக்காது. பணமில்லா இந்தியாவை உருவாக்குவது சாத்தியப்படவில்லை என்றால் பெரும்பாலும் பணத்தை நம்பியே இந்தியா இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிஎம்எஸ் மட்டுமல்லாது, ஆர்எஸ்எஸ்ன் மற்றொரு அமைப்பான பாரதிய கிஸான் சங்கமும் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடிவு குறித்து தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது. அதன் மூத்த நிர்வாகியான மோகனிமோன் மிஸ்ரா கூறியிருப்பதாவது,
மோடியின் பணம் செல்லாது என்ற முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், ஏழைகளுக்கு அதிக வலியை கொடுத்துள்ளது என்று கூறினார். ஏ.டி.எம்.கள் இருக்கும் சூழ்நிலையில் இத்தகைய மாற்றம் அவசியம் தான்.
ஆனால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பணிகளை விட்டுவிட்டு வங்கி வாசலில் விவசாயிகள் நிற்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகி உள்ளது.
ஆனால் வங்கியிலும் பணம் இல்லை. ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லை. இதற்கு தேவை யான வகையில் வங்கிகளை முன் கூட்டியே தயார்படுத்தியிருக்க வேண்டும்.
வரிசையில் நிற்கும் மக்களுக்கு உணவு, குடிநீருக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஸ்வதீஷ் ஜக்ரன் மஞ்ச் என்ற அமைப்பும், மோடியின் செயலை வரவேற்றாலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசவுகர்யத்தை குறைத்திருக்க வேண்டும் என்று அதன் தேசிய இணை அமைப்பாளர் அஸ்வனி மகாஜனும் குற்றம் சாட்டி உள்ளார்.