கொச்சி: சபரிமலையில் கடந்த 30 நாள்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்றும், வரும் திங்கள் கிழமை (19ந்தேதி) ஆன்லைன் புங்கிங் கிடையாது என்றும் தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூசைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சபரிமலை தரிசனத்தக்கு இணையதளத்தில் நாடு முழுவதும் இருந்து இதுவரை 21,71,452 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில் இதுவரை 19,38,452 பேர் சபரிமலையில் தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால், தரிசன நேரத்தை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பகல் 1 மணிக்கு பதிலாக 1.30 மணிக்கும், இரவு 11 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கும் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 30 நாள்களில் 19.38 லட்சம் பக்தர்கள் சாமிதரிசனம் செய்துள்ளனர். அடுத்த இரு நாள்களும் வார இறுதி நாள்கள் என்பதால், பக்தர்கள் எண்ணிக்கை விரைவில் 20 லட்சத்தைத் தாண்டும் எனவும் தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவிலான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதால், டிச. 19ந்தேதி அன்று ஆன்லைன் புக்கிங் இல்லை என சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மேலும், அன்றைய நாளில் முன்பதிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. முன்பு முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் அன்றைய நாளில் தரிசனம் செய்ய அனுப்பிவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.