கும்பகோணம்: அரியலூர் அருகே சுத்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 20 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட வழக்கில்,  சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்ட 3 பேருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனையும்,  3 பேருக்கு 14ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து,  கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

தமிழக கோவில்களில் உள்ள ஏராளமான பழங்கால சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிலைகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரியலூர் அருகே சுத்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 20 ஐம்பொன்  சிலைகள் 2008ம் ஆண்டு திருடப்பட்டது. இது தொடர்பாக சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் உட்பட 6பேரை கடந்த 2012ம் ஆண்டு   காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சிலை திருட்டு தொடர்பாக, ஜெர்மனி நாட்டில் இருந்த சுபாஷ் சந்திர கபூரை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்து தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இது தொடர்பாக வழக்கு கடந்த 10ஆண்டுகளாக மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த பரபரப்பான சிலை திருட்டு வழக்கை விசாரித்த கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட சுபாஷ் சந்திர கபூர் (73) மற்றும் சென்னையை சேர்ந்த சஞ்சீவ் அசோகன் (60), பாக்கியகுமார் (50), மதுரையை சேர்ந்த மாரிச்சாமி (65), ஸ்ரீராம் என்கிற சுலோகு (52), பார்த்திபன் (55) ஆகிய 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், குற்றவாளி சுபாஷ் சந்திர கபூருக்கு ரூ.4 ஆயிரம் அபராதமும், மற்ற 5 குற்றவாளிகளுக்கும் ரூ.8 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

தீர்ப்பை தொடர்ந்து, சிறை தண்டனை பெற்றவர்கள் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.