சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திட்டமிட்டபடி இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக நேற்று தொழிலாளர் நல ஆணையத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்றமுதல் போராட்டம் தொடங்கி உள்ளது.
மின்வாரியத்தில் காலியாக உள்ள 55000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு இன்று காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. அதுபோல மாநிலம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்கள் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் மிகவும் முக்கியமான ஒன்று மின்சாரத்துறை. இந்த துறையில் போதுமான அளவு ஊழியர்கள் நியமிக்கப்படுவது இல்லை. பெரும்பாலான வேலைகளை தனியாரிடம் குத்தகைக்கு மாநில அரசு விடுத்து வருகிறது. மேலும் ஓய்வுபெற்றவர்களின் இடங்களை நிரப்புவதிலும் மாநில அரசு காலதாமதம் செய்து வருகிறது. இதனால், மின்வாரியத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு வேலைப்பளு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு மின்வாரியத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்கள் ஓய்வு பெறும்போது உரிய நேரத்தில் ஓய்வுக்கால பணபலன்களை வழங்க வேண்டும். பிற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியான ரூ.5 லட்சத்தை மின்வாரியத்திலும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 9 ம் தேதி மாநிலம் முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தொழிலாளர் நல ஆணையத்தில் மின்வாரிய தொழிலாளர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால்,. இதில் முடிவு எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி இன்று மின்வாரிய ஊழியர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தங்களின் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 9 மணி முதல் மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர்.