ஆக்ரா
இரு மாணவர்கள் உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2 மாணவர்கள், ஆசிரியரின் காலில் துப்பாக்கியால் சுட்டு, சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 16 மற்றும் 18 வயதாகும் இந்த மாணவர்கள் நேற்று முன்தினம் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இரு மாணவர்களும் சுமித் சிங் என்ற அந்த ஆசிரியரின் பயிற்சி வகுப்பில் படித்துள்ளனர். மாணவர்களும் ஆசிரியரும், மாணவர்களும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இரு மாணவர்களில் ஒருவர், மாணவியிடம் பேசுவதை ஆசிரியர் கண்டித்ததையடுத்து மாணவனின் சகோதரர் ஆசிரியரிடம் தொலைப்பேசியில் வாக்குவாதம் செய்துள்ளார்.
இது நடந்து முடிந்து 6 மாதம் ஆகியிருந்த நிலையில் அவர்கள் பயிற்சி முடித்து வெளியேறி விட்டனர். ஆயினும் ஆசிரியர் மீது மாணவர்களுக்கு ஆத்திரம் இருந்ததால் நேற்று அவர்கள் பயிற்சி மையத்துக்கு வந்து ஆசிரியரை வெளியே அழைத்து அவர் வெளியே வந்ததும் ஒரு மாணவன், அவரை துப்பாக்கியால் சுட்டு மற்றொருவர் அதை வீடியோ எடுத்துள்ளார்.
வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு சினிமா படப் பாணியில் ஒரு மாணவன் பேசி உள்ளான். அவன் “6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வருவேன். நான் 40 தோட்டாக்களை உன் உடலில் பாய்ச்ச வேண்டும். இன்னும் 39 மீதம் இருக்கிறது” என்று கூறியுள்ளான்.
மாணவர்களின் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஆசிரியர் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டு உள்ளார். துப்பாகி சூடு பற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. காவல்துறையினர் அந்த மாணவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.