டெல்லியில் உள்ள மாளவியா நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குரங்குகளை வைத்து திருட்டு மற்றும் வழிப்பறி செய்ததாக இரண்டு குரங்குங்கள் மற்றும் 2 திருடர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் கடந்த மாதம் ஆட்டோவில் அமர்ந்திருந்த வழக்கறிஞர் ஒருவரிடம் மூன்று திருடர்கள் குரங்குகளை காட்டி 6000 ரூபாயை பறித்து சென்றதாக போலீசில் புகாரளித்தார்.
விசாரணையில் ஆட்டோவின் முன் இருக்கையில் ஒரு குரங்கையும் பின் இருக்கையில் ஒரு குரங்கையும் அமர வைத்து அவரது பர்சில் இருந்த பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.
திருடர்களை தேடிவந்த போலீசார் குரங்குகளுடன் சுற்றி திரிந்த 2 பேரை வியாழனன்று கையும் களவுமாக பிடித்தனர் இது தொடர்பாக அஜய் என்ற மற்றொரு திருடனை தேடிவருகின்றனர்.
பிடிபட்ட குரங்குகளை விலங்குகள் நல மையத்தில் ஒப்படைத்தனர்.
குரங்குகள் மற்றும் வனவிலங்குகளை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்பதால் இவர்கள் மீது திருட்டு குற்றத்திற்கான 392 பிரிவு தவிர வனவிலங்கு பாதுகாப்பு சட்ட பிரிவுகளிலும் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று தெற்கு டெல்லி இணை ஆணையர் அதுல் குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.