மதுரை: சீனாவில் அதிகவேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று பல நாடுகளில் மீண்டும் பரவத்தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவிலும் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரை விமான நிலையம் வந்த தாய், மகள் என 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தொற்று சற்று தணிந்து, 3ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் இயல்வு வாழ்க்கை திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் கொரோனாவின் புதிய மாறுபாடு வைரசான பிஎஃப்7 சீனா உள்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இதனால், மேலும் பல ஆயிரம் பேர் சீனாவில் பாதிக்கப்பட்ட நிலையில், கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. ஆனால், உலக நாடுகள் இந்த தொற்று பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், சீனா ஏட்டிக்குப்போட்டியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.
இந்தியாவில் தொற்று பரவலை தடுக்க விமான நிலையத்தில் மீண்டும் சோதனை தொடங்கப்பட்டுள்ளதுடன், மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று (டிச. 27) காலை 9. 40 மணியளவில் இலங்கையில் இருந்து இந்தியா வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அவர்களுக்கு நடத்தப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் பிரதீபா (39) என்ற பெண் மற்றும் அவரது மகள் பிரத்தியங்கார ரிகா (6) என்ற குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த பெண் வசித்துவரும் விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கி உள்ள பிரதீபா மற்றும் குழந்தை பிரத்தியங்கராவை சுகாதாரத்துறை அதிகாரிகள் 15 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட பிரதிபாவின் கணவர் சுப்பிரமணியம் சீனாவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடன் மனைவி மற்றும் குழந்தை சேர்ந்து தங்கியுள்ளனர்.
தற்போது சுப்பிரமணியம் வேலைக்காக ஜெர்மனி சென்றுள்ளார். இதனால் தமிழகம் திரும்பிய தாய், மகள் இரண்டு பேருக்கும் தொற்று உறுதி செய்த நிலையில், மதுரை விமான நிலையம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தீவிர கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இலங்கை விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.