திருத்தங்கல் கல் குவாரியில் குளித்த 2 மாணவர்கள், எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே உள்ள அதிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் ரூபன். இவர் 4 ம் வகுப்பு பயின்று வருகிறார். முத்தையாவின் உறவினர் பாண்டி மகன் விஜயராஜா. மேட்டமலையில் உள்ள கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் ரூபனை அழைத்துக் கொண்டு அங்குள்ள கல்வெட்டான் குழிக்கு குளிக்கச் சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் தேடிச் சென்றனர். கல்வெட்டான் குழி அருகே உடைகள் இருந்ததால் விஜயராஜா மற்றும் ரூபன் கல்வெட்டான் குழியில் மூழ்கி இருக்கலாம் என கருதினர்.
இதனைத் தொடர்ந்து கல்வெட்டான்குழிக்குள் தீயணைப்பு வீரர்கள் தேடினர். அப்போது விஜயராஜா மற்றும் ரூபன் உடல்கள் மீட்கப்பட்டன. ஒரே நேரத்தில் 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.