மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 22 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இது தவிர பெருந்துறையில் சாலை போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி இந்த ஆண்டு முதல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கரூரில் இந்த வருடம் புதியதாக மருத்துவ கல்லூரி தொடங்கப்படுகிறது. இதையும் சேர்த்து தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் வரும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் கடந்த ஆண்டு 3 ஆயிரம் எம்.பி.பி.எஸ். இடங்கள் இருந்தன. மொத்தம் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டன. மீதம் உள்ள இடங்கள் தமிழக மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டன. இந்த வருடம் மதுரை மருத்துவ கல்லூரிக்கு 100 இடங்களையும், திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு 100 இடங்களையும் அதிகரிக்க மருத்துவ கல்வி இயக்ககம், இந்திய மருத்துவ கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இந்த வருடம் ஆன்லைன் மூலம் மருத்துவ கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளது என்றும், அதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது என்றும் மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறி இருந்தார். இவ்விவகாரம் தமிழகத்தில் மருத்துவ துறையை தேர்வு செய்துள்ள மாணவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இத்தகைய சூழலில் கரூரில் செய்தியாளர்களை சந்தித்த காதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வினியோகம் செய்யப்படும். ஆனால் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படாது. வழக்கமான முறையிலேயே நடைபெறும். தற்போது எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 3,350 இடங்கள் கிடைக்கும். முதுகலை மருத்துவ படிப்புக்கும் 508 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.