சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ள மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி, தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வந்தது. ஏற்கனவே 2 கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற நிலையில், இன்று 3வது கட்ட பேச்சு வார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஏற்கனவே  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விசிகவுக்கு 2தொகுதிகளும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று 3வது கட்ட பேச்சு வார்த்தையில் கம்யூனிஸ்டு மற்றும் மதிமுக கட்சிகள் கலந்துகொண்டுள்ளன.

இதில், மார்க்சிய கம்யூனிஸ்டுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. மார்க்சிய கம்யூனிஸ்டுக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் ஸ்டாலின் முன்னிலையில் போடப்பட்டது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழகத்தில் நடைபெற உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திமுகவுக்கு கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.