சென்னை: “அடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பில் சேர விளையாட்டு பிரிவினருக்கு 2% இடங்கள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என சென்னையில் பொறியியல் கலந்தாய்வை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் மே மாதம் 6ம் தொடங்கியது. அதன்படி அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக விண்ணப்பித்தவர்களுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கி உள்ளது.
இந்த கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. இந்த கலந்தாய்வு செப். 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் சிறப்பு பிரிவினர்களாக உள்ள மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு, அரசு பள்ளிகளில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற்ற வருகிறது.
இந்த ஆண்டு பொறியியல்படிப்புக்கு, விண்ணப்பித்து உள்ளவர்களில் 111 பேர்எ மாற்றுத்திறனாளிகள், இவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவில் சேர இடங்கள் உள்ளன. 664 பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் பொது பிரிவில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. கிட்டத்தட்ட 38 பேர் விளையாட்டு பிரிவிலும் , முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 11 பேரும் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 168 பேர் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவில் இன்று சேர உள்ளனர். 2113 மாற்றுத் திறனாளிகள், 416 விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வரிசுகளுக்கு 1643 என்ற அளவில் அடுத்த கட்டமாக பொதுப்பிரிவு சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கும்.
நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கு 2,40,491. பேர் விண்ணப்பித்தனர். அதில் 1,79,938 தகுதி உடையவர்கள். 1,76,322 பொது மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள். தொழிற்கல்வி படித்து விட்டு வரும் மாணவர்களுக்காக இரண்டு சதவீதத்தின்படி 3596 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 8 கல்லூரிகளை மூடுகிறார்கள், அதே போல் மூன்று புதிய கல்லூரிகளை தொடங்குகிறார்கள். தற்போது மொத்தம் 433 கல்லூரிகள் உள்ளன.
பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை முதலில் குறைவாக இருந்தது தற்போது தமிழக முதலமைச்சரின் நடவடிக்கையால் பல்வேறு முயற்சிகள் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கல்லூரியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டும் போதாது தரத்தையும் உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் தொடர்ந்து சொல்லி வருகிறார். அப்படி கல்வி கரத்தை உயர்த்த வேண்டும் என்று அடிப்படையில்தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து பிரிவுகளிலும் தமிழ் வழியில் படிக்கலாம் என்கிற முறையை கொண்டு வந்தார்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் படிக்கும் பொழுதே தொழிலில் எங்கு சேரலாம் எப்படி பயிற்சி இருக்கும் என்பதெல்லாம் கொடுக்கப்படுகிறது. 7.5% அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், இந்தாண்டு முதல் தமிழ் புதல்வன் திட்டம் மேற்கொள்ளப்பட்டு மாதம் உதவித் தொகை வழங்கப்படும்.
விளையாட்டு பிரிவில் சேர்வதற்கு அதிக மாணவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகிறார்கள் இதனை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு முதல் முதலமைச்சரிடம் பேசி, விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு இரண்டு சதவிகிதம் அடுத்த ஆண்டிலிருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.
பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை இணையதளங்களில் வெளியிடுவது போல் தன்னாட்சி பெற்ற கல்லூரி முடிவுகளையும் அடுத்த ஆண்டு முதல் இணையதளங்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும்.
வெகு விரைவில் துணைவேந்தரை நியமிக்க சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பொறியியல் துறைகளுக்கு கல்வி கட்டணம் கடந்த ஆண்டு இருந்த அதே கட்டணம் தான் இருக்கும். பொறியியல் படிப்புகளுக்கு கல்வி கட்டணம் உயராது.”
இவ்வாறு கூறினார்.