சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.
சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெங்களூருவில் வைத்து 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை பெரம்பூரில் உள்ள ஜே.எல்.கோல்டு பேலஸ் நகைக் கடையில், பிப்ரவரி மாதம் 10ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நகைக்கடை அமைந்துள்ள கட்டிடத்தில் 2-வது தளத்தில் நகைக்கடை உரிமையாளர் ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கீழ் தளத்தில் வாகனங்களை நிறுத்தும் இடம் உள்ளது. நகைக்கடையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
அப்படி இருந்தும், கொள்ளையர்கள் கடையில் ஷட்டர் மற்றும் நகை பெட்டகத்தை வெல்டிங் மிஷின் மூலம் வெட்டி கடையில் இருந்து, சமார் 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும், சிசிடிவி கேமராவில் உள்ள ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றனர்.
இந்த கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். முதலில், இரு ஆந்திர நபர்களை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெரம்பூர் நகைக் கடையில் நடைபெற்ற கொள்ளைக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது. இந்த வழக்கில் முன்னதாக 7 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கொள்ளையர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறினர்.
இந்நிலையில் இன்று, கொள்ளை சம்பவம் தொடர்பாக திவாகரன், கஜேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூர் மகாலட்சுமி லே அவுட் போலீசாரால் இவர்கள் கைது செய்யப்பட்டு, சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கைதான இருவரிடமும் சென்னை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.