சென்னை:
தமிழகத்தின் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நாளை தொடங்குகிறது. இந்த மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொள்கிறார்.
ஏற்கனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2015ம் ஆண்டு முதலாவJ உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது 2வது உலக முதலீட்டாளர் மாநாடு நாளை தொடங்கி 2 நாட்கள் ( 2019 ஜனவரி 23, 24-ம் தேதி) நடைபெறுகிறது.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும், தமிழக்ததில் உள் நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளகளை ஈர்க்கும் வகையிலும் உலக முதலீட்டாளர்கள் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சர்வதேச முதலீட்டாளர்களின் 2 நாள் மாநாடு நாளை தொடங்குகிறது. காலை 10 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டில், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை கொள்கை 2019ஐ மத்திய பாதுகாப்பு துைற அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தொழில் பொருட்காட்சியும் நடக்கிறது. அதில், பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் புதிய, பழைய தயாரிப்புகள் குறித்து பார்வைக்கு வைக்க உள்ளன.
நாளை தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும், ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது. மதியம் 2 மணி அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கொரியா நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு நடக்கிறது.
இதை தொடந்து 2வது நாள் மாநாடு நாளை மறுதினம் (24ம் தேதி) காலை 10 மணிக்கு சிறு,குறு தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்குடன் தொடங்குகிறது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
24ம் தேதி மாலை 3 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு நிறைவு உரை ஆற்றுகிறார்.
மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத் திடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இந்த மாநாட்டில் பங்கேற்க 1,600 நிறுவனங் கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மாநாட்டில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்களின் குற்றப் பின்னணி ஆராய வேண்டும், அவ்வாறு இருப்பின் அவர்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.