சென்னை : தமிழ்நாட்டில் மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, விரைவில் அமைய உள்ள காஞ்சிபுரம் மற்றும் மதுரை சிப்காட்டுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, நாட்டிலேயே கல்வி வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களை காட்டிலும் கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் தமிழகம் தொழில்வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக மாற்றவும், தமிழக இளைஞர்களுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும், 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தை பொருளாதாரத்தில் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மாற்றம் பெறுவதற்கான முயற்சியாக தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஏராளமான சிப்காட் எனப்படும் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்ட வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் 23 சிப்காட் தொழிற்பூங்காக்களே இருந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4 வருடங்களிலேயே 30க்கும் மேற்பட்ட சிப்காட் பூங்காக்கள் இதுவரை திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 2 சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது. காஞ்சிபுரம், மதுரையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூருக்கு அருகே 422.33 ஏக்கரில் ரூ.530 கோடியில் காஞ்சிபுரம் சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ளது.