சென்னை: அமமுக கூட்டணியில் இரண்டு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இந் நிலையில், அமமுகவுடன் மருது சேனை சங்கம் மற்றும் கோகுல மக்கள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் முடிவில் இரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் மருது சேனை சங்கம், கோகுல மக்கள் கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு உள்ளனர். அதன்படி கோகுல மக்கள் கட்சிக்கு தளி தொகுதியும், மருது சேனை சங்கத்துக்கு திருமங்கலம் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.