ராமநாதபுரம்: பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார்.
- பசும்பொன்னில் 2 மண்டபங்கள்
- திமுகவில் அண்ணன், தம்பி என்று பாசம்
- ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை
- எல்லோரும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே திராவிடம்
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள தேவர் நினைவிடத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன் மரியாதை செய்தனர்.
பின்னர் அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவர் திருமகள் என்று அண்ணா பேரன்போடு அழைத்தார். 1963-ம் ஆண்டு தேவர் மறைந்தபோது அண்ணா, கலைஞர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
1969ம் ஆண்டு பசும்பொன்னுக்கு வந்து நினைவிடத்தை பார்வையிட்டு அரசு உதவிகள் செய்தவர் கலைஞர். 2007ம் ஆண்டு தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தி பெருமை சேர்த்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர். திமுகவில் அண்ணன், தம்பி என்று பாசத்தோடு எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று தேவர் கேட்டார். தேவர் பெயரில் பல்வேறு இடங்களில் கல்லூரிகள் அமைய காரணமாக இருந்தவர் கருணாநிதி.
தேவர் நினைவிடத்தில் அணையா விளக்கை தொடங்கி வைத்தவர் கலைஞர். பசும்பொன்னில் ரூ.2.45 கோடி செலவில் பல்வேறு பணிகளை செய்துகொடுத்தவர் கலைஞர் என முதல்வர் குறிப்பிட்டார்.
தேவர் நினைவிடத்தில் மக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்த ரூ.1.50 கோடியில் 2 மண்டபங்கள் அமைக்க ஆணையிட்டுள்ளேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை; சாலையில்தான் வீசப்பட்டுள்ளது என்று கூறியவர், சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கான சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஆளுநர் மாளிகையில் இருந்து திட்டமிட்டு பொய் தகவல் பரப்பப்படுகிறது. ஆளுநர் பாஜககாரராகவும் ஆளுநர் மாளிகை பாஜகவின் தலைமையிடமாகவும் மாறி உள்ளது; இது வெட்கக்கேடு என்று விமர்சித்தவர், எல்லோரும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதே திராவிடம் என்றார்.
இன்னாருக்கு இதுதான் என்று சொல்வது ஆரியம். இந்த உண்மையை ஆளுநர் ஆர். என்.ரவி புரிந்து கொள்ள வேண்டும். மீனவர்கள் விவகாரம் குறித்து எடுத்துரைக்க டி.ஆர்.பாலுவை டெல்லி அனுப்பி வைத்துள்ளேன். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேச டி.ஆர்.பாலுவை டெல்லி அனுப்பி வைத்துள்ளேன். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை குறித்து ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறு பேசினார்.