சென்னை: ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2 எம்டெக் படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், எம்.டெக், பயோடெக்னாலஜி, எம்.டெக், கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கான, மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் திடீரென அறிவித்தது. இந்த அறிவிப்பு பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து நுழைவுத்தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள், பிரச்சனையில் தமிழக அரசிடம் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து பிரச்னையை தீர்க்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந் நிலையில் எம்.டெக். பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாநில அரசின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த 9 இடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை வைத்துள்ளது.