மும்பை: இந்தியாவிலிருந்து அதிகளவாக இந்த ஆண்டு 2 லட்சம் முஸ்லீம் யாத்ரிகர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார்கள் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

இவர்களை, நாடெங்கிலும் 21 இடங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட விமானங்கள் சுமந்து செல்கின்றன. மொத்தம் 1.40 லட்சம் யாத்ரிகர்கள் இந்திய ஹஜ் கமிட்டி மூலமாகவும், மீதமுள்ள 60,000 பேர் தனியார் சுற்றுலா ஏஜென்சிகள் மூலமாகவும் செல்கின்றனர்.

இப்பணியில் மொத்தம் 725 தனியார் சுற்றுலா ஏஜென்சிகள் ஈடுபட்டுள்ளன. சில ஏஜென்சிகள் மீது பல்வேறான புகார்கள் எழுந்ததையடுத்து, தவறு செய்யும் ஏஜென்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசின் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆண் துணையில்லாமல் யாத்திரை செல்லும் பெண்களின் எண்ணிக்கை இந்தாண்டு 2,340 என்பதாக அதிகரித்துள்ளது. மேலும், யாத்திரை செல்லும் மொத்த நபர்களில், 48% பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியாவிலிருந்து வருகைதரும் யாத்ரிகர்களின் எண்ணிக்கையை 2 லட்சம் என்பதாக உயர்த்தி அனுமதியளித்தது செளதி அரேபிய அரசு என்பது குறிப்பிடத்தக்கது.