திருச்சி: திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன என்றும், திமுக அரசில் தமிழ்நாட்டில் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்றும், திருச்சி வேளாண் சங்கமம் நிகழ்ச்சி மற்றும் வேளாண் கண்காட்சியை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக அரசின் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் ‘வேளாண் சங்கமம் 2023’ என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று துவங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது.
உழவர் நலத்துறை சார்பில் திருச்சியில் நடைபெறும் தி வேளாண் சங்கமம் 2023 நிகழ்ச்சி தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அங்குள்ள வேளாண் கண்காட்சியையும் இன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். மாநில அளவிலான இந்தக் கண்காட்சியில் 250 உள்அரங்குகளும், 50 வெளி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. 17 மாநில அரசுத்துறைகளும், மத்திய அரசின் 8 ஆராய்ச்சி நிறுவனங்களும், 3 வேளாண்மை சார்ந்த பல்கலைக்கழகங்களும் 80-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம், பாரம்பரிய நெல் வகைகள், பாரம்பரிய வேளாண் கருவிகள், பல்வகை தென்னை ரகங்கள், செயல் விளக்கத் திடல்கள், பசுமைக்குடில்கள் உள்ளிட்டவை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன. விவசாயிகளுக்குப் பயன்படும் புதிய தொழில்நுட்பம் குறித்த தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெறுகிறது. கண்காட்சிக்கு வரும் விவசாயிகளுக்குத் தேவைப்படும் அனைத்து பயிர்களின் விதைகள், தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள், காய்கறி விதைகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை வேளாண் விளை பொருட்கள், இயற்கை பருத்தி ஆடை, மூலிகைச்சாறு, பானங்கள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது,
மிக மிக பசுமையான நிகழிச்சியில் கலந்து கொள்ளகூடிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார். அணைத்து துறைகளும் ஒருசேர வளர வேண்டும் என்று திமுக அரசு உழைத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
வேளாண் துறையை தலைசிறந்த துறையாக மாற்றி இருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என முதல்வர் புகழ்மிதுடன் தெரிவித்துள்ளார். மற்ற துறைகளை போல வேளாண்துறையை நினைத்தவுடனே வளர்த்துவிட முடியாத எனவும் வேளாண்துறையை வளர்க்க நிதி மட்டும் அல்ல நீர்வளமும் வேண்டும் என தெரிவித்துள்ளார். வேளாண்துறையில் பல புதிய திட்டங்களை தொடங்கியுள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் வேளாண்துறை வளர்ச்சி அடைந்துள்ளதாவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசு செயல்படுத்திய திட்டங்களால் 6 ஆண்டுகளுக்கு பிறகு 2021-22ல் 119 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. உரிய தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு 5.63 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி 47 ஆண்டில் சதையை எட்டியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் இலவச மின்இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 2.10லட்சம் விவசாய இலவச மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. மாறாக, திமுக ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் 2 லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்கியுள்ளது, எவிவசாயிகளுக்கு சிறப்பு குறுவை தொகுப்பு வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக கூறியவர், திமுக அரசில் தமிழ்நாட்டில் உணவு உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று வேளாண் சங்கமம் 2023 நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசை விட அதிகமாக தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மிக மிக பசுமையான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி’ கொடுத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், எ.வ. வேலு, அன்பில் மகேஷ், தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி. ராஜா, ஆட்சியர் மா. பிரதீப் குமார் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.