மேற்கு வங்கத்தில் வஃக்ப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் அது மேலும் பல மாவட்டங்களுக்கு பரவியுள்ளது.

வக்ஃப் (திருத்த) மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பிறகு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக மாறியுள்ளது.

மேலும், இந்த சட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டது.

இருப்பினும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் வாரியம், சன்னி வக்ஃப் கவுன்சில் உள்ளிட்ட பல அமைப்புகள் இந்த புதிய சட்டத்தை எதிர்க்கின்றன.

இது தொடர்பாக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

ஏப்ரல் 8ம் தேதி முர்ஷிதாபாத்தை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலை-12 ஐ மறித்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து வன்முறையாக மாறி வாகனங்களுக்கு தீ வைய்ப்பு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறின.

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறை ஏற்பட்டதை அடுத்து இந்த வன்முறை மால்டா, முர்ஷிதாபாத், தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் ஹூக்ளி ஆகிய மாவட்டங்களுக்கு பரவியது.

இந்த வன்முறையில் இரண்டு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் வன்முறை தொடர்பாக இதுவரை 110 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ தனது எக்ஸ் பக்கம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அனைவருக்கும் எனது வேண்டுகோள், அனைத்து மதத்தினருக்கும் எனது உண்மையான வேண்டுகோள், தயவுசெய்து அமைதியாக இருங்கள், நிதானமாக இருங்கள். மதத்தின் பெயரால் எந்த அநீதியான நடத்தையிலும் ஈடுபடாதீர்கள்.

ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது, அரசியலுக்காக கலவரத்தைத் தூண்டாதீர்கள். கலவரத்தைத் தூண்டுபவர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்கள்.

நினைவில் கொள்ளுங்கள், பலர் கிளர்ச்சியடையும் சட்டத்தை நாங்கள் உருவாக்கவில்லை. சட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. எனவே நீங்கள் விரும்பும் பதிலை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும்,” என்று X இல் பெங்காலி மொழியில் அவர் பதிவிட்டுள்ளார்.