சென்னை:  தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில்  2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படுவதாக  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

 நவம்பர் 12 ஆம் தேதி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் இந்துக்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்வர்.  தீபாவளி என்றாலே பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்புகள், பலகாரங்கள்தான் பிரசித்தி பெற்றது.  ஆனால், சுற்றுச்சூழல் மாசு என கூறி, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம்  டெல்லியில் தடை விதித்துள்ளதுடன், பல மாநிலங்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.  மேலும் பட்டாசு தயாரிக்கவும் கடும் கட்டுப்பாடுகள் போடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில்,  தமிழ்நாடு அரசு தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படு வதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு  சுற்றுச்சூழல்துறை  அறிவிப்வுப வெளியிட்டு உள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி தீபாவளி பண்டிகைக்கு பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.