புவனேஸ்வர்

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வந்தே பாரத் ரயில் மீது கல்வீசியதாக இரு மதுப்பிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு நாடெங்கும் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருவதால் மக்கள் விரைவாகப் பயணிக்க முடிகிறது..  பல பகுதிகளில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. பயணிகள் யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

கடந்த ஞாயிறு மாலை ரூர்கேலாவில் இருந்து புவனேஸ்வர் நோக்கி 20835 என்ற எண் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.  ரயில் ஒடிசாவின் தேன்கனல்-அங்குல் ரயில்வே பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேராமண்டலி மற்றும் புதாபங்க் நகருக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, மர்ம நபர்கள் சிலர் ரயில் மீது கற்களை வீசியுள்ளனர்.

இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. பணியில் இருந்த ரயில்வே காவலர் உயரதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசு ரயில்வே காவல்துறையினர்  உஷார் படுத்தப்பட்டனர்.  சம்பவப் பகுதிக்கு ரயில்வே பாதுகாப்புப் படையின் உதவி பாதுகாப்பு ஆணையாளர் கட்டாக்கில் இருந்து புறப்பட்டு சென்றார்.

தல்சேர் பகுதியின் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றப் புலனாய்வு பிரிவினர் இணைந்து நேற்று மாலை குர்தா சாலை பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது ரயில் தண்டவாளம் அருகே தனித்த இடத்தில் பதுங்கி இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்ததில், அவர்கள் ரயில் மீது கல் வீசியது தெரிய வந்தது.

மதுப்பிரியர்களான அவர்கள் மது அருந்திய போது விளையாட்டுக்காக ரயில் மீது கல்வீசியதாக ஒப்புக் கொண்டனர். அவர்கள் இருவரையும் தேன்கனல் பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் அதிகாரிகள் முன்னிறுத்தினர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.