சென்னை: மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக தமிழ்நாடு  சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

அதிமுகவைச்சேர்ந்த கே.பி.முனுசாமி,  வைத்திலிங்கம் ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த  நிலையில், அவர்கள் இருவரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக தேர்வு பெற்றதால், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை  ராஜினாமா செய்தனர். இதனால்,  காலியான 2 இடங்களுக்கு தேர்தல் தேதியை அகில இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தது.

இந்த 2 உறுப்பினர் பதவிக்கு  திமுக சார்பில்,  மருத்துவர் அணி மாநில செயலாளர் மருத்துவர் கனிமொழி மற்றும் நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என் ராஜேஷ் இருவரும் போட்டியிட்டனர். அவர்கள் 2 பேரும் 21ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வேட்புமனுக்களை சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர்.

இந்த தேர்தலில் வேறு யாரும் எதிர்த்து போட்டியிடாததால், திமுக வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார்  போட்டியின்றி தேர்வுபெற்றுள்ளதாக தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.