சென்னை: 2023ம் ஆண்டு தொடக்கத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், புதியதாக பெயர் சேர்ப்பவர்கள், பெயர் நீக்கம், திருத்தம் போன்றவற்றுக்னான சிறப்பு முகாம் நாளையும், நாளை மறுதினம் ஆகிய இரு நாட்கள் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயரை சேர்க்கவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறி சென்றவர்கள் திருத்தம் செய்யவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள படிவங்கள் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களுடன் கொடுப்பதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் பேர் பயன் அடைந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, .2-வது கட்டமாக சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களும் மாநிலம் முழுவதும் நடைபெறுகின்றன.

சென்னையில் 3,723 வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளில் இந்த மையங்கள் நடக்கின்றன. படிவங்கள், 6, 6ஏ, 7 மற்றும் 8 ஆகியவற்றை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும், மையங்களுக்கு செல்லாமல் www.nvsp.in என்ற இணைய தளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.