சென்னை: நெம்மேலியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அடையாறு முதல் சோழிங்கநல்லூர் வரையிலான தென்சென்னை பகுதிகளில் இரண்டு நாட்கடள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
கொளுத்தும் வெயில் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் மேவகமாக குறைந்த வருகிறது. இதனால், பொதுமக்கள் தண்ணீரை வீணாக்கக்கூடாது என அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரை குடிநீராக்கி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களால்தான் சென்னை மக்கள் குடிநீர் தட்டுபாடின்றி இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், தென்சென்னை பகுதிகளில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாட்கள் குடிநீர்வராது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர குடிநீர்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணியில் இருந்து மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணி வரை 1 நாள் மட்டும் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதனால் 13-வது மண்டலமான அடையாறு பகுதியில் உள்ள திருவான்மியூர், பள்ளிப்பட்டு, கோட்டூர் ஆர்.கே.மடம் தெரு, இந்திராநகர், 14-வது மண்டலமான பெருங்குடியில் உள்ள கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகள், 15-வது மண்டலமான சோழிங்கநல்லூரில் உள்ள ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில்நகர், கண்ணகி நகர், காரப்பாக்கம், வெட்டுவாங்கேணி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, ஒக்கியம்- துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீர் வராது.
எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் வழங்கப்படும்.
கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்”
இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.