தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மது பாட்டில்கள் பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் 38 பாராளுமன்றத்துக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் ஓட்டலில் உள்ள மதுபான கூடங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அவைகள் அடைக்கப்பட்டன.
இதனை பயன்படுத்தி யாராவது மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்களா? என்று சோதனை செய்ய தஞ்சையில் பல இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கிழக்கு போலீசார் தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றபோது, திருவையாறு பஸ் நிறுத்தம் அருகே 2 பேர் மதுபாட்டில்களை விற்றுக்கொண்டிருந்தனர்.
உடனடியாக போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில், வடுவூரை சேர்ந்த பஞ்சமூர்த்தி, சொக்கலிங்கம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.