புதுச்சேரி
புதுச்சேரியில் சமூக பரவல் காரணமாக வெளிநாடு செல்லாத இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை ஒமிக்ரான் தொற்று வெளிநாடு சென்று வந்தவர்களிடம் மட்டுமே கண்டறியப்பட்டது. எனவே வெளிநாட்டுப் பயணம் செய்து விட்டு வருவோர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
புதுச்சேரியில் ராஜா தியேட்டர் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் மற்றும் லாஸ்பேட்டையை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆகியோர் கடந்த 7 ஆம் தேதி கொரோனாவால் பாதிப்பு அடைந்து மருத்துவமனையில் அனும்திக்கப்ப்ட்டனர். இந்த இருவர் உள்ளிட்ட 20 பேரின் ரத்தம் மற்றும் உமிழ்நீர் மாதிரிகள் ஒமிக்ரான் ஆய்வுக்கு பெங்களூரு அனுப்பப்பட்டது.
நேற்று மதியம் இந்த இருவருக்கும் ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி ஆனது. அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அவர்களுடன் தொடர்பில் இருந்தோரை கண்டுபிடித்துப் பரிசோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் இருவரும் வெளிநாடு செல்லாதவர்கள் என்பதால் சமூக பரவலால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.