கோவை: தர்மபுரியிலிருந்து கோவை நோக்கி சென்ற ஒரு லாரியில் மறைத்து வைத்திருந்த 2.5 டன் எடையுள்ள வெடி பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தைக் காவல்துறை முறையாக விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும் எனத் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

நவம்பர் 29ஆம் தேதி இரவு சேலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு  மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அப்போது, தருமபுரியிருந்து கோவைக்கு மூன்று டன் வெடிபொருட்கள் கடத்தப்படுவதாக கூறிவிட்டு போனை கட் செய்தார். இதையடுத்து உஷாரான காவல்துறையினர்,  உடனடியாக களமிறங்கி, வாகனங்களை தீவிரமாக சோதனை செய்யும் பணிகளை தொடங்கினர்.

அப்போது,  கருப்பூர் எஸ்.எஸ்.ஐ குணசீலன் தலைமையிலான காவல்துறையினர் ஓமலூர் டோல்கேட்டில் நின்று ஒவ்வொரு வண்டியாக சோதனை செய்தனர். விடியற்காலை நேரத்தில் ஒரு லாரியில் வைக்கோல் போர் வந்துள்ளது. அதை முழுமையாக சோதனை செய்ததில், வைக்கோல் கட்டுகளுக்கு அடியில் 100 பெட்டிகளில் ஜெலட்டின் ஜெல், 2,580 கிலோ, ஒரு பெட்டியில், 950 எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 3 மீட்டர் ஒயர் என மொத்தம் 3 டன் வெடிபொருட்கள் இருந்தன.

இதையடுத்து, அந்த லாரியை ஓட்டிவந்த தருமபுரியை சேர்ந்த டிரைவர் இளையராஜாவை போலீசார் கைது செய்தனர்.  அவரிடம் விசாரித்ததில் வைக்கோல் போரை ஏற்றிக்கொண்டு லாரியை மெதுவாக ஓட்டும்படியும், கோவைக்கு சென்றபிறகு கூப்பிடுமாறு சிலர் அனுப்பியதாக கூறியுள்ளார்.

டெட்டனேட்டர் உள்ளிட்ட வெடி பொருட்களை லாரியில் அனுப்பியதற்கு பின்னணியில் ஏதேனும் சதி வேலை இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் ஏதும் வெடிகுண்டுகளை வைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியில் மறைத்து வைத்திருந்த மரப்பெட்டிகளில் 2.5 டன் எடையுள்ள வெடி பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை மீட்டுள்ளது சேலம் காவல்துறை.

இந்த வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் இளையராஜா என்பவரை கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சட்ட விரோதமாக இந்தப் பொருட்கள் எடுத்து செல்லப்பட்டதாலேயே ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். துரிதமாக நடவடிக்கை எடுத்த சேலம் காவல்துறையினரை பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கும் அதே வேளையில், இவ்வளவு வெடி பொருட்களைத் தைரியமாகத் தமிழகத்தில் கடத்தும் நிலை வந்துள்ளது கவலைக்குரியது.

குறிப்பாக, கடந்த வருடம், அக்டோபர் 23 -ம் தேதியன்று கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே குண்டு வெடித்து ஜமிசா முபீன் என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதி உயிரிழந்தது இன்றளவும் கோவை நகரை பதட்டத்தில் வைத்துள்ளது. இந்த நிலையில், அதே கோவைக்கு இந்த வாகனம் சென்று கொண்டிருந்தது அதிர்ச்சியளிக்கிறது.


காலம் தாழ்த்தாமல் , காவல்துறையினர் இந்த வெடிபொருட்களைச் சட்ட விரோதமாக எடுத்து செல்ல முயன்ற கும்பலை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி பூங்காவான என அழைக்கப்படும் தமிழகத்தில் சட்ட விரோத வெடிபொருட்கள் வலம் வருவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, இந்த வழக்கை காவல்துறையினர் முறையாக விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுபோல பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  2,953 கிலோ வெடிமருந்து வைக்கோல் போர்வையில் மறைத்து வைக்கப்பட்டு கோவைக்கு எடுத்து செல்லப்பட்டதை, சேலத்தில் போலீசார் பிடித்தனர்! விசாரிக்கின்றனர்! வண்டியில் என்ன இருக்கிறது என சோதித்து கண்டுபிடித்தது போலீஸ் கான்ஸ்டெபிளின் சாதாரண செயல்! இப்போது சிக்கிக்கொண்டது என தெரிந்தவுடன் அனுப்பியவர்கள் யாரிடம் தொடர்புகொண்டு என்ன பேசுவார்கள்? இவர்கள் அவர்களுக்கு என்ன பதில் சொல்வார்கள்?

இதே கோயம்புத்தூரில் 2022 ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒருநாள் முன்பாக கோயிலில் வெடிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வெடிபொருள் நிரப்பிய கார் ஒன்று கோட்டீஸ்வரன் கோயிலின் முன்பே யாராலும் இயக்கப்படாமல் வெடித்துவிட்டது!

தமிழக முதலமைச்சரும் போலீஸ் உயர் அதிகாரியான டி.ஜி.பி அவர்களும் இது வெறும் கேஸ் சிலிண்டர் வெடிப்புதான் என சாதித்தார்கள்! ஆனால் வழக்கினை N.I.A எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு எடுத்துக்கொண்டு விசாரித்தது

30 க்கும் மேலான இஸ்லாமிய மதவாத பயங்கரவாதிகளோடு தொடர்பு இருப்பதால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்! இன்றுவரை முதலமைச்சரும் திமுகவினரும், D.G.P அவர்களும் வருத்தம் தெரிவிக்கவில்லை நாங்கள் தவறாக அறிவித்துவிட்டோம், அது ஹிந்துக்களை குறிவைத்து செயல்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத திட்டம்தான் என சொல்லவில்லை என குற்றம் சாட்டி உள்ளார்.