திருப்பதி: ஆந்திராவில் திருப்பதி கோயில் லட்டு விற்பனை துவங்கிய முதல்நாளில், மொத்தம் 2.4 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. எனவே பக்தர்களின் கோரிக்கையை அடுத்து ரூ.50 மதிப்புள்ள ஒரு பிரசாத லட்டின் விலையை பாதியாக குறைத்து ரூ.25க்கு விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி, ஆந்திரா முழுவதும் குண்டூர் நீங்கலாக 12 மாவட்ட தலைநகரங்களில் இன்று லட்டு பிரசாத விற்பனையை துவக்கியது தேவஸ்தானம். குண்டூருக்கான லட்டு விற்பனை பங்கு விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் முன்னிலையில், ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்களில் லட்டு பிரசாத விற்பனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கிச் சென்றனர். விற்பனை துவங்கிய சில மணி நேரங்களிலே அனைத்து லட்டுகளும் விற்று தீர்ந்தன என்று கூறப்படுகிறது.
மேலும், ஊரடங்கு அமலில் இருப்பதால் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பக்தர்களுக்கு பிரசாத லட்டை அனுப்புவதற்காக, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.