தர்மசாலா,

ர்மசாலாவில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இந்திய அணியுடன் மோதும்  4 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட இந்த  டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு பார்டர் – கவாஸ்கர் டிராபி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான  முதல்போட்டி புனேவில் நடைபெற்றது. அதில், 333 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் தொடர் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இதன் காரணமாக இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமன்நிலையில் இருந்தது.

தொடர்ந்து 3வது டெஸ்ட் தொடர் ராஞ்சியில் நடைபெற்றது. இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது.

இதன் காரணமாக வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்யும் கடைசி தொடரான,  4வது தொடர் போட்டி இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட் செய்தது. கேப்டன் ஸ்டீவன் சுமித்  அதிரடியாக விளையாடி 111 ரன்கள் குவித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி 300 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆட்டம் இழந்தது.

அதைத்தொடர்ந்து இந்திய அணி களத்தில் குதித்தது. ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை தொடங்கியது. தொடர்ந்து  2–வது நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று 3–வது நாள் ஆட்டத்தில்  இந்திய அணி முதல் இன்னிங்சில் 118.1 ஓவர்களில் 332 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது.

இதன் காரணமாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 32 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில்,  2–வது இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடங்கியது. இந்திய பவுர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர்  தடுமாறினர். அதன் காரணமாக விக்கெட்டும் மளமளவென சரியத்தொடங்கியது.

2–வது இன்னிங்சில் 53.5 ஓவர்களில் 137 ரன்னில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டு களையும் பறிகொடுத்து பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன்  இந்திய அணி களத்தில் குதித்தது.

இன்று  4-வது நாள்  ஆட்டம் நடைபெற்றது. விறுவிறுப்பான  ஆட்டத்தில் 23.5 வது ஓவரில் இந்தியா 106 ரன்களை அடித்து வெற்றிக்கனியை தட்டிச் சென்றது.

இதன் காரணமாக  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது.

இதன் காரணமாக பார்டர் – கவாஸ்கர் டிராபியில் இந்தியா  வெற்றி பெற்றுள்ளது.  2012-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் குறித்து, ஏற்கனவே,   ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்,  ஆலன் பார்டர்,  ‘‘இந்தியாவிற்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றினால், இதுவரை எந்த அணியும் செய்யாத மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றுவது ஆஸ்திரேலியாவிற்கு புனித கோப்பையை அடைவது போன்றதாகும். அது நம்ப முடியாததாகவும் இருக்கும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்,