சென்னை: தமிழ்நாட்டில் ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 193 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.

எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்படாத வழக்குகள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நேற்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது,  இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஶ்ரீநாத் ஶ்ரீதேவன்  அறிக்கை தாக்கல் செய்தார். அதில்,  தமிழகத்தில் முன்னாள், இந்நாள், எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 193 வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிலுவையில் உள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,  “தமிழகத்தில் முன்னாள், இந்நாள், எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 193 வழக்குகளும், புதுச்சேரியில் 23 வழக்குகள் என 216 வழக்குகள் தற்போது வரை நிலுவையில் உள்ளன” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் அதில் பல வழக்குகள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தடை காரணமாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி உயர் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை அறிக்கையாக இரண்டு வாரங்களில் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தடை விதிக்கப்படாத வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். தேவையில்லாமல் தள்ளி வைக்க கூடாது என கூறியதுடன்,  குற்றச்சாட்டு பதிவுக்காக எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தால் அது தீவிரமாக கருதப்படும்” என உத்தரவிட்டார்.

வழக்கு பின்னணி

ஏற்கனவே இது தொடர்பான வழக்கின்  விசாரணையானது கடந்த ஆண்‘டு நவம்பர் 14ந்தேதி  (2024 நவ.14) அன்று விசாரணைக்கு வந்த போது, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் குறித்த விவரங்களை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் தலைமை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அது மட்டுமின்றி சிறப்பு நீதிமன்றத்தில் தற்போதுள்ள உள்கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள், தலைமை பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.

அதே போல், எம். பி, எம்.எல்ஏக்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஓராண்டு கழித்து இன்று அந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது,    தற்போதைய விசாரணையில் சிறப்பு நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விவரங்களைப் பெற்று சமர்ப்பிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.