ரியாத்: தன் நாட்டிற்குள் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்துள்ள சவூதி அரசு, அவர்களுக்கு மொத்தம் 19 வகையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அடுத்த 2030ம் ஆண்டிற்குள் கச்சா எண்ணெயால் கிடைக்கும் வருவாய் பெருமளவு குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதனால், சுற்றுலா மூலம் வருவாய் ஈட்ட திட்டமிட்டு வருகிறது அந்நாட்டு அரசு.
இதன் ஒருபகுதியாக தனது சுற்றுலா தளங்களை மேம்படுத்தி, பிரபலப்படுத்தி வருகிறது சவூதி அரேபியா. மேலும், சுற்றுலா விசாக்களை வழங்கப்போவதாகவும் அறிவித்தது. இதன்படி, ஆன்லைனில் 49 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் விசா வழங்கும் முடிவை எடுத்தது.
அதேசமயம், சவூதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 19 வகையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது அந்நாட்டு அரசு.
சவூதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டின் சட்ட நடைமுறைகளை அறிந்துகொள்ள வேண்டும், பெண்கள், தோள்பட்டை மற்றும் முழங்கால்களை மறைக்கும் வகையில் ஆடை அணிந்திருக்க வேண்டும், ஆண்களும் பெண்களும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது, பொது இடத்தில் முத்தம் கொடுக்கக்கூடாது, மோசமான வார்த்தைகள் அல்லது படங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணிதல் கூடாது என்பதான 19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கட்டுப்பாடுகள் பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. சவூதி அரேபிய சட்டதிட்டங்களுக்கு ஈடுகொடுக்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால், இத்தகைய கடுமையான விதிமுறைகளால், அந்நாடு எதிர்பார்க்கும் அளவிற்கு சுற்றுலாப் பயணிகள் அஙகே வருவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.