சென்னை: தமிழகத்தில் வீடு வீடாக ‘பூத் சிலிப்’ விநியோகம் தொடங்கி உள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதகு தெரிவித்து உள்ளார். மேலும், சி-விஜில் செயலி மூலம் இதுவரை 1,822 புகார்கள் பெறப்பட்டு, 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, 19 புகார்கள் விசாரணையில் உள்ளது. தேர்தல் விதிமீறல்கள் குறித்து சி-விஜில் செயலியில் புகார் கொடுக்கும் பொதுமக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கான பணிகள் விறுவிறுப்படை ந்து வரும் நிலையில், மக்களவை தேர்தலையொட்டி, தமிழகத்துக்கான மாநில அளவிலான செலவின பார்வையாளராக கேரளாவை சேர்ந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி பி.ஆர்.பாலகிருஷ்ணனை தேர்தல் ஆணையம் நியமித்து உள்ளது.
தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட 58 செலவின பார்வையாளர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதுடன், அனைத்து அமலாக்க துறைகளின் பணிகளையும் அவர் ஒருங்கிணைப்பார். தொகுதிவாரியாக சென்று ஆய்வு நடத்துவார் என கூறிய தேர்தல் அதிகாரி சாகு, தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி ஏப்ரல் 1ந்தேதி முதல் தொடங்கியுள்ளது என்றவர், வாக்காளர் வழிகாட்டி கையேடும் வீடு வீடாக வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
இன்று வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சுங்கத் துறை, கலால் வரித் துறை, மாநில ஆயத்தீர்வை துறை என பல்வேறு முகமைகளின் அதிகாரிகளுடன் ஆலோசமைன நடத்துவதாக கூறிய தலைமை தேர்தல் அதிகாரி நாளை (3-ம் தேதி ) மாலை 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் காணொலி வாயிலாக, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகள், தலைமைச் செயலர்கள், டிஜிபிக்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் என்றார்.
இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் (ஏப்.4) விளவங்கோடு இடைத்தேர்தல், மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், எஸ்.பி.க்களுடன் காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளேன். இதில்மாநில தேர்தல் செலவின பார்வையாளரும் பங்கேற்பர் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர், தமிழகத்தில் 21,229 பேரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. அவற்றில் இன்னும் 71 துப்பாக்கிகள் மட்டும் ஒப்படைக்கப்படவில்லை எங்னறும், ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கியில் ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பணம் கொடுத்ததாக வந்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற கட்சி தலைவர்கள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுபோன்ற நிகழ்வுகளில் நடவடிக்கை எடுப்பதற்கு, சி-விஜில் செயலி மூலம் பெறப்படும் வீடியோ ஆதாரங்கள் உதவியாக உள்ளன. சாதாரணமாக செல்போனில் எடுத்து அனுப்பும் வீடியோக்களை, முந்தைய நிகழ்வுகள் என்று கூறி மறுத்துவிட வாய்ப்பு உள்ளது. அவற்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய அவகாசம் தேவைப்படும். எனவே, நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக சி-விஜில் மூலம் பொதுமக்கள் புகார் அளித்தால் 100 நிமிடங்களுக்குள் அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியும். புகார் அளிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்பதால், அச்சப்பட வேண்டாம்.
சி-விஜில் செயலி மூலம் இதுவரை 1,822 புகார்கள் பெறப்பட்டு, 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, 19 புகார்கள் விசாரணையில் உள்ளது.
நடத்தை விதிகள் அமலில் இருக்கும்வரை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிட அருங்காட்சியகத்தை மூட வேண்டும் என்ற புகார்தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கசெய்தி துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பணிக்காக ஏற்கெனவே 25 கம்பெனி துணை ராணுவ படையினர் வந்துள்ளனர். மேலும் 165 கம்பெனி துணை ராணுவ படையினர் ஓரிரு நாளில் தமிழகம் வருவார்கள்.
தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.15 லட்சம், பெரிய அளவிலான காயத்துக்கு ரூ.7.50 லட்சம், லேசான காயத்துக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுகிறது. பயங்கரவாத தாக்குதல் போன்ற நிகழ்வுகளில் இந்த நிவாரண தொகை 2 மடங்காக வழங்கப்படுகிறது.
ரூ.109 கோடி பறிமுதல்: தமிழகத்தில் கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி காலை வரை, தேர்தல் நடத்தை விதிகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.48.61 கோடி ரொக்கம், ரூ.3.06 கோடி மதுபானம், ரூ.67 லட்சம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், ரூ.47.53 கோடி தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள், ரூ.9.88 கோடி பரிசுப் பொருட்கள் என ரூ.109.76 கோடி மதிப்பில் பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதுதவிர, வருமான வரித் துறை சார்பில் ரூ.2.74 கோடி பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் பூத் சிலிப் விநியோகத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கிவைத்தார். ஒரு நாளுக்கு3.25 லட்சம் பேருக்கு பூத் சிலிப் வழங்கப்படும். இப்பணியில் 3,800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணிகள் 13-ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்