சென்னை:
ஜூலை 18 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலதரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான் அமையுமே தவிர, தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது என்றும், மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968-ம் ஆண்டு ஜூலை – 18ஆம் நாள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட அந்த நாள்தான் தமிழ்நாடு நாள் எனக் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளைக் கவனமாகப் பரிசீலித்து தாய்த் தமிழ்நாட்டுக்குத் தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாட அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.