சென்னை: பல்வேறு ஊழல் முறைகேடு மற்றும் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்ட 18 இளநிலை மற்றும் உதவி பொறியாளர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார். இது மாநகராட்சி அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது சென்னை மாநகராட்சியில், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றதும், விதிகளை மீறி விடப்பட்ட, 500க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக மழைநீர் கால்வாய் அமைப்பதற்கான டெண்டர், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான டெண்டர் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து,. சென்னை மாநகராட்சியில் அயல் பணி அடிப்படையில் மாற்றலாகி வந்த, 12 இளநிலை பொறியாளர்கள், ஆறு உதவிப் பொறியாளர்கள், திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, திருச்சி, சேலம், கடலுார் உட்பட பல்வேறு மாநகராட்சிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.
ஒரே நாளில், சென்னை மாநகராட்சியில், 18 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற மாநகராட்சி, நகராட்சி மற்றும் சில உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.