சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு நடப்பாண்டில் இதுவரை 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத 1,42,286 பேர் விண்ணப்பத்துள்ளனர். மேலும், தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத 31,803 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பு பயில தகுதித்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு இளநிலை மருத்துவ படிப்பு களான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 2022-2023ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் தொடங்கிய நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 20ஆம் தேதி இரவு 9 மணி வரை அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
அதன்படி, இளநிலை நீட் தேர்வுக்கு இதுவரை 18.72 லட்சம் மாணாக்கர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும்,. அதில், 10,64,606 பேர் பெண்கள், 8,07,711 ஆண்கள், 12 பேர் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பித்துள்ளனர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு, 2,57,562 பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுத 1,42,286 பேர் விண்ணப்பத்துள்ளனர். மேலும், தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத 31,803 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் 91,415 எம்பிபிஎஸ் இடங்கள், 26,949 பிடிஎஸ் இடங்கள், 50,720 ஆயுஷ் இடங்கள் என்று 1,69,084 இடங்களுக்கு மொத்தம் 18,72,339 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை தகவல் வெளியிட்டுள்ளது.
நீட் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை http://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக வரும் 27-ம் தேதிக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஹால்டிக்கெட் பெறுதல், தேர்வு மையங்கள் விவரம் உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும், ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011- 40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.