சென்னை:  தமிழ்நாட்டில், முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட வருவதாக சட்டப் பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு  அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் கூறினார்.

சட்டப்பேரவையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது,  மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார்.

அப்போது,  முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கூறியதுடன், கடந்த காலத்தில்   970 மருத்துவமனை களில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியதுடன்,  ரூ.22 லட்சம் வரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.

மேலும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1.39 கோடி பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என்று கூறியதுடன்,  திமுக ஆட்சி அமைந்த பின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பிரிமியம் தொகை ரூ.849 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் பயன்பெறுவோரில் 5ல் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.