புதுக்கோட்டை,
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடிய மக்கள் போராட்டம் 174 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டம் 174வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக போராட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரான புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 110 இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதியில் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வாணக்கன் காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயுவை தங்கள் பகுதியில் எடுக்கக் கூடாது என மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
அவர்கள் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கிய மக்களின் போராட்டம் 174 நாட்களைக் கடந்துள்ளது.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக போராட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரான புஷ்பராஜ் அறிவித்தார்.
ஓ.என்.ஜி.சி. நிறுவனமானது எரிவாயு குழாய் மற்றும் கிணறுக்கான பணிகளை மீண்டும் துவக்கி னால், தாங்களும் போராட்டத்தினை மீண்டும் துவங்குவோம் என்றும் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் அறிவித்தார்.
இதற்கிடையில், நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து துண்டு பிரசுரம் விநியோகம் செய்ததாக சேலம் மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டு தற்போது விடுதலையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.