டில்லி

டந்து முடிந்த மக்களவை தேர்தலில் 14% அதாவது 78 பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.

பல வருடங்களாக பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கு பெரும்பாலான வட இந்திய கட்சிகள் ஒப்புதல் அளிக்காமையால் இந்த கோரிக்கை இதுவரை நிறவேற்றப்படவில்லை.  பாஜக இந்த தீர்மானத்தை நிறைவேற்றி சட்டமாக்கப் போவதாக பல முறை தெரிவித்தும் அதற்கான முயற்சிகளில் இறங்கவில்லை என கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வின் போது 33% பெண்களுக்கு முன்னுரிமை அளித்தால் அதுவே இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுக்கும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எந்த கட்சியும் அதை பின்பற்றவில்லை. ஒரிசாவின் பிஜு ஜனதா தளம் மற்றும் திருணாமுல் காங்கிரஸ் மட்டுமே பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு அளித்துள்ளன.

முதல் மக்களவை கடந்த 1952 ஆம் வருடம் உருவான போது 24 பெண் உறுப்பினர்கள் இருந்தனர். அதாவது அப்போது இருந்த மொத்த 480 உறுப்பினர்களில் அது 5% ஆகும். அதன் பிறகு பெண் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. கடந்த 2014 ஆம் ஆண்டு அமைந்த 16 ஆம் மக்களவையில் 11% பெண் உறுப்பினர்கள் இருந்தனர்.

தற்போதைய 17 ஆம் மக்களவையில் இந்த எண்ணிக்கை 14% ஆக அதாவது 78 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். சுதந்திரத்துக்கு பிறகு உள்ள மக்களவையில் இது அதிக எண்ணீக்கை என்றாலும் மற்ற தெற்கு ஆசிய நாடுகளின் சராசரியான 18% விட இது குறைவானதாகும். உலகெங்கும் உள்ள பெண் உறுப்பினர்கள் சராசரி எண்ணிக்கை 24% ஆகும்.

தற்போதைய மக்களவையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் 11 பெண் உறுப்பினர்கள் உள்ளனர். அதே நேரத்தில் அந்த மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் மக்களவை தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.   மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸ் 41% பெண் வேட்பாளர்களை களத்தில் இறக்கியது. அந்த 17 வேட்பாளர்களில் 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அந்த மாநிலத்திலும் 11 பெண் வேட்பாளர்கள் வென்றுள்ளனர்.

அரியானா மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட 11 பெண் வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். அதிகம் பெண் வாக்காளர்கள் உள்ள மாநிலமான கேரளவில் ஒரேஒரு பெண் உறுப்பினர் மட்டுமே தேர்தெடுக்கபட்டார். காங்கிரசி சேர்ந்த ரம்யா அரிதாஸ் கேரள மாநிலத்தின் ஆலத்தூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கேரளாவின் இரண்டாம் தலித் பென் மக்களவை உறுப்பினர் என்னும் பெருமையையும் பெற்றுள்ளார்.