டில்லி
மோடியின் ஆட்சியில் 17 பெரிய தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது.
நேற்று காஷ்மீர் மாநிலம் புல்வானா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீரர்கள் காயமுற்றனர். இதற்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிர வாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, “நமது சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது காஷ்மீர் மாநிலத்தில் நடந்த கோழைத்தனமான தாக்குதலால் நான் மிகவும் அமைதி இழந்துள்ளேன்.
இதில் நமது வீரர்கள் பலர் கொல்லபட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமுற்றோர் விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறேன்” என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தனது டிவிட்டரில், “நமது சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
விபத்தில் உயரை நீத்த வீரர்களுக்கு எங்களது அஞ்சலியையும் அவர்கள் குடும்பத்துக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உரி, பதான்கோட், புல்வாமா என 17 பெரிய தீவிரவாத தாக்குதல்கள் நரேந்திர மோடியின் ஆட்சியில் நடைபெற்றுள்ளது” என பதிந்துள்ளார்.
மேலும், “நமது வீரர்களான மன்தீப் மற்றும் நரேந்திர சிங் தலையை வெட்டி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொலை செய்தபோது பிரதமர் மோடி மவுனமாக இருந்துள்ளார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.