ஸ்ரீநகர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத்தின் கட்சிக்கு சென்ற காங்கிரஸ் தலைவர்களில் 17 பேர் அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தாய்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினர். அவர்களை கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சால்வை அணிவித்து வரவேற்றார்.
காங்கிரஸ் கட்சியில் தலைமையில் மாற்றம் தேவை என குரல் எழுப்பிய மூத்த காங்கிரஸ் தலைவர்களில் குலாம்நபி ஆசாத்தும் ஒருவர். இவர்கள், காங்கிரஸ் கட்சியில் கலகக் குரல் எழுப்பிய தலைவர்கள் ஜி23 தலைவர்கள் என அழைக்கப்பட்டனர் ஆனால் காங்கிரஸ் மேலிடம் இந்த தலைவர்களின் கருத்தை கண்டுகொள்ளாமல் உதாசீனப் படுத்தியதால், அவர்கள் கட்சியில் இருந்து விலகி, தனிக்கட்சியை தொடங்கினார். தமது அரசியல் கட்சியின் பெயரை ஜம்மு காஷ்மீர் மக்களே முடிவு செய்வார்கள் என கூறினார். பின்னர்,. தமது கட்சியின் பெயர் ஜனநாயக ஆசாத் கட்சி (‘Democratic Azad Party) என அறிவித்தார். மேலும் நீலம்-வெள்ளை- மஞ்சள் நிறத்திலான கட்சி கொடியையும் அறிமுகம் செய்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், கட்சி பெயருக்கு உருது, சமஸ்கிருத மொழிகளில் 1,500 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஜனநாயகத்தன்மை யுடனும் அமைதியையும் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிற ஒரு பெயராக ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரை முடிவு செய்துள்ளோம் என்றார். பின்னர் அந்த கட்சியின் பெயர் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என மாற்றப்பட்டது.
இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் அவரது கட்சியில் சேர்ந்து வந்தனர். மேலும் பலர் சேர ஆர்வம் காட்டினார். ஆனால் குலாம்நபி ஆசாத் செயல்பாடுகள், பாஜகவுக்கு ஆதரவாகவே இருந்தது வந்தது. இதனால், அதிருப்தி அடைந்த பலர், அங்கிருந்து வெளியேறத் தொடங்கி உள்ளனர்.
இதையடுத்து, 17 ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் குலாம் நபி ஆசாத் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியில் இருந்து விலகி இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இவர்களில், முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் மற்றும் பிசிசி முன்னாள் தலைவர் பீர்சாதா முகமது சயீத் ஆகியோர் அடங்குவர். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் எனப்படும் பாரத் ஜோடோ யாத்திரை நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, அதனால்தான் இந்த தலைவர்கள் அனைவரும் திரும்பி வர முடிவு செய்துள்ளனர் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.
குலாம் நபி ஆசாத்தின் கட்சித் தலைமை வெளியேறுவது புதிய கட்சிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறினாலும், இன்னும் ஆரம்ப நிலையில் இருக்கும் அரசியல் அமைப்பு குறித்து தவறான சமிக்ஞையை அனுப்பலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.