சென்னை; பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து உள்ளார். அதன்படி 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு (2023) பொங்கல் பண்டிகை ஜனவரி  15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் வருகிறது. முன்னதாக 14-ந்தேதி போகிப் பண்டிகையும், 16ந்தேதி மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் மற்றும் உழவர் திருநாள்  கொண்டாடப்பட உள்ளது. மொத்தம் 4 நாட்கள் விடுமுறை இருப்பதால், ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்வார்கள். அதனால், மக்களின் வசதிக்காக தமிழகஅரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக இன்று  போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புல், பொங்கலையொட்டி, 3 நாட்களுக்கு பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும்,  ஜனவரி 12 முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும்  என்றும்,  பொங்கலையொட்டி,  தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிடப்பட்டு இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னையில்  இருந்து மட்டும் 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதற்கான முன்பதிவுகள்  தொடங்க உள்ளதாகவும், அதுபோல பிற மாவட்டங்களில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும்  அதிகமான சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படும் எனவும் அரசு தெரிவித்து உள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, 94450 14450, 94450 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால், 044 24749002, 044 2628445, 044 26281611 எண்களிலும் புகார் அளிக்கலாம்.

பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவிற்காக கோயம்பேட்டில் 26 மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா ஒரு மையமும் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டடு முன்பதிவுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட இருப்பதாகவும்,  அது தவிர தமிழக அரசின் போக்குவரத்துதுறை மற்றும் பேடிஎம், பஸ் இந்தியா போன்ற இணையதளங்கள் மூலமும் முன்பதிவுகள் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல பொங்கல் சிறப்பு பேருந்துகள்,  கோயம்பேடு பேருந்து நிலையம் தவிர, தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த பேருந்து நிலையங்களுக்கு முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் 5 பஸ் நிலையங்களுக்கும் 250 மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்ப வசதியாக வருகிற 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.