சென்னை: சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வரும் நிலையில், சாலையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 910 மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், 169 முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் கனமழை நவம்பர் 12ம் தேதி வரை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக தேங்கும் தண்ணீரை வெளியேற்ற 910 மின்மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மேலும், கால்வாய் மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள மக்களை தங்க வைக்க 169 முகாம்கள் தயாராக உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.