சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நவீன BS6 வகையிலான 1,614 புதிய டீசல் பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரற்கான டெண்டரை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட்டில், 2024-25 ஆம் நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதலுக்கு ரூ.1535.89 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில், BS6 வகை கொண்ட 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படிடடு வரும் பழைய பேருந்துகளால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. மேலும் கிராமப்புறங்களில் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகள் மழை காலத்தின்போது, ஒழுகி வருகிறது. மேலும் பல பேருந்துகளின் இருக்கைகள் உடைந்து காணப்படுகின்றன. இது அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பழைய பேருந்து கழித்து, புதிய பேருந்துகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே இது குறித்து, தமிழ்நாடு 2024-25 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, “தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமங்களுக்கும் தரமான போக்குவரத்து சேவைகளைத் தொடர்ந்து வழங்கிட புதிய பேருந்துகளை வாங்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே, இந்நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, 2024-25 ஆம் நிதியாண்டில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.1535.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், பிஎஸ் 6 வகை கொண்ட 1,614 புதிய டீசல் பேருந்துகள் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. ஜெர்மன் வங்கி நிதி உதவியில் இந்த பேருந்துகள் வாங்கப்பட உள்ளது. இந்த டெண்டரில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் டிசம்பர் 2ம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 245, விழுப்புரம் கோட்டத்திற்கு 347, சேலம் கோட்டத்திற்கு 303, கோவை கோட்டத்திற்கு 105, கும்பகோணம் கோட்டத்திற்கு 305, மதுரை கோட்டத்திற்கு 251, நெல்லை கோட்டத்திற்கு 50 என்று மொத்தம் 1,614 பேருந்துகள் வாங்க டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.