தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர். அதற்காக 2,200 கோடி ரூபாய் இந்த நிதி ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது :
“தமிழ்நாட்டில் உள்ள 649 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில், மொத்தம் 55 ஆயிரத்து 567 கி.மீ. நீளமுள்ள சாலைகள் அமைந்துள்ளன.
இவற்றில் 6 ஆயிரத்து 45 கி.மீ. நீளமுள்ள சாலைகள், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் மற்றும் குடிநீர் குழாய் பணிகள் போன்றவற்றால் சேதமடைந்துள்ளன.
மேலும், 2016-2017ம் ஆண்டிற்கு பின்பு மேம்படுத்தப்படாமல் பழுதடைந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீளச் சாலைகள் உள்ளன.
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கும், பாதுகாப்பான வாகனப் போக்குவரத்திற்கும் நல்ல சாலைகள் இன்றியமையாதவை என்பதைக் கருத்தில்கொண்டு. பழுதடைந்த அனைத்து சாலைகளையும் மேம்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மேற்கூறிய பழுதடைந்த சாலைகள் விரைவில் மேம்படுத்தப்படும்.
இதற்காக, தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியாக, நடப்பு நிதியாண்டிலேயே 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, ஆயிரத்து 600 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படும்.
பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கிடையே இத்தகைய திட்டங்களை தீட்டுகிறோம். சொன்னதைச் செய்ய மட்டுமல்ல சொல்லாததையும் செய்யவும் முயற்சித்து வருகிறது நம்முடைய தமிழ்நாடு அரசு” என்று கூறினார்.