சென்னை:
இன்று 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப் படுத்தும் விதமாகச் செப்டம்பர் மாதத்திலிருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்படுகிறது.
12-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு கோடி அளவில் தடுப்பூசிகள் கையிருப்பு இருக்கும் நிலையில், காலக்கெடு முடிந்தும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளித்து 12-வது மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில், இன்று 16 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 12வது மெகா தடுப்பூசி இயக்கத்தின் ஒரு பகுதியாகத் தமிழகத்தில் இன்று 16,05,293 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இதில், 5,89,140 லட்சம் நபர்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும், அவர்களில் 10,16,153 பேர் இரண்டாவது டோஸையும் எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.