சென்னை: தமிழகத்தின் 15வது தமிழக சட்டப்பேரவை கூட்டம் மற்றும் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி சட்டமன்ற கூட்டத்தொடரும் இன்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 2-ஆம் தேதி (பிப்ரவரி) ஆளுநர்உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து,5ந்தேதி (இன்று) வரை கூட்டத்தொடர் நடைபெறும் என அலுவல் ஆய்வுகுழுவில் முடிவு செய்யப்பட்டு, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 3ந்தேதி மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அதையடுத்து, நேற்று (4ந்தேதி) இன்று (5ந்தேதி) சபையில் விவாதங்கள், புதிய மசோதாக்கள், உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இன்றைய கடைசி நாள் கூட்டம், ஆளும் அரசுக்கும் கடைசி கூட்டம் என்பதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் அளித்து பேசிய முதல்வர் பின்னர் விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக முதல்வர் அறிவித்திருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது காவல்துறை பதிவு செய்த வழக்குகள் திரும்ப பெறப்படும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி தண்டனையை அதிகரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 8 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு அனைத்தும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, சட்டபேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
இதன் காரணமாக தமிழகத்தில் 15வது தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த மாத இறுதியில், 16வது சட்டமன்றத்தை அமைப்பதற்கான, மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அதைத்தொடர்ந்து, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும் கட்சி 16வது சட்டமன்றத்தை கூட்டும்.
16வது சட்டபேரவையை அமைப்பதற்கான புதிய சட்டமன்ற கூட்டம் நடப்பாண்டு, மே மாதம் 16ந்தேதிக்குள் கூட்டப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.