சென்னை: 15ஆவது உட்கட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி 7 மாவட்டங்களில் புதிய செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவின் 15வது உட்கட்சித் தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், இடையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக, தேர்தல் பணிகள் முடங்கிய நிலையில், தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததும் மீண்டும் நடைபெற்று வநதது.  அதன்படி, கட்சியின் மாவட்ட அவைத் தலைவர், செயலாளர், 3 துணைச் செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் செப்டம்பர் 22 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த பதவிகளுக்கான வேட்புமனுக்கள் சென்னையில்  உள்ள திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் கலை உள்ளிட்டோர் வேட்பு மனுக்களை பெற்றனர்  வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு நேற்று திமுக மாவட்டச் செயலாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், திமுகவின் 72 மாவட்டங்களில் 71 மாவட்டங்களின் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  தென்காசி வடக்கு மாவட்டத்தின் செயலாளர் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்கு செல்லத்துரை மற்றும் தனுஷ்குமார் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை தெற்கு, கோவை வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாமக்கல் மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, தர்மபுரி மேற்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கான மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 கரூர் மாவட்டச் செயலாளராக அமைச்சர் செந்தில் பாலாஜி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மனோ தங்கராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் கீதா ஜீவன், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஷ், விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயளாளராக அமைச்சர் எ.வ.வேலு, திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளராக அமைச்சர் நாசர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு மாவட்ட செயலளராக அமைச்சர் சேகர்பாபு, சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளராக ஆ.சந்திரசேகர், சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக து.விக்டர், சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளராக எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம், சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக ஆர்.வெற்றிவீரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.